TV1,TV2,TVi, 34 வானொலி நிலையங்கள் அடங்கிய அரசாங்க ஒலி,ஒளிபரப்பு நிலையமான ஆர்டிஎம்  மக்களுக்கு ஏற்புடைய தகவலையும்,செய்திகளையும் வழங்கி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நிகழ்ச்சிகளை ஆர் டி எம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வானொலியைப் பொருத்தமட்டில்  மின்னல்.எப்.எம் மலேசிய அரசாங்கத்தின் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆகும். உலகிலேயே 24 மணி நேர முதல் தமிழ் ஒலிபரப்புச் சேவையை தொடங்கிய  வானொலி நிலையம் இதுன்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மலேசிய வானொலி தமிழ்ப் பகுதிக்கு தொடக்கத்தில் தஞ்சை தாமஸ் பொறுப்பு வகித்தார். தற்போதுதிரு.எஸ் . குமரன், இந்த ஆண்டு தொடங்கி  தலைவராகப் பொறுப்பு வகித்து வறுகிறார்.

 

1942-ல் இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது மலாயா தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் 'JMPK வானொலி' என்று பெயர் மாற்றம் அடைந்தது. அப்போது டி.எஸ்.சண்முகம் தலைவராக இருந்தார். கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து அப்போதைய ஒலிபரப்பு தொடங்கியது. 1956 ஆம் ஆண்டு Federal House-இல் இருந்து சேவைகள் தொடர்ந்தன. மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதி இங்கிருந்தபோது பல நவீனத்துவங்களைப் பெற்றது. பல தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் உருவாகினர்.

 

1968-ஆம் ஆண்டு தொடங்கி மின்னல் எப் எம்  ஒலிபரப்பும், அதன் அலுவலகமும் அங்காசாபுரியில் செயல்பட்டு வருகிறது. மலேசிய வானொலியில்  கலப்படம் நிகழ்ச்சி 1957 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்று வரை வானொலி  நேயர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மலாயா வானொலியின் முதல் கலப்பட நிகழ்ச்சி கோலாலம்பூர் மாநகர மண்டபத்தில் ஒலிப்பதிவானது. பின்னர் மலேசியத் தந்தையும் முதல் பிரதமருமான துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தேசிய அளவிலான ஒரு மாபெரும் கலப்பட நிகழ்ச்சி குவாலாலும்பூர் – டாசேக் பெர்டானாவில் நடைபெற்றது. 15,000 பல்லின மக்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். அந்த நிகழ்ச்சி மலாயா வானொலியின் தமிழ்ப் பகுதிக்கு ஒரு பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது.

 

கடந்த சில வருடங்களாக நிறுத்தப்படிருந்த கலப்படடம்  மீண்டும் 2012-ல் ஒலிபரப்புக்கு கொண்டு வரப்பட்டது. மின்னல் எப்.எம் தலைவராக இருந்த திரு.இராஜசேகரன், கலப்படம் நிகழ்ச்சி மீண்டும் வானொலியில் ஒலியேறுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த முயற்சிகள் வெற்றி அடைய  பெரிதும் பக்கபலமாக இருந்தவர் தகவல், தொடர்பு, பண்பாட்டுத் துணையமைச்சர் செனட்டர் டத்தோ மெக்லின் டென்னிஸ் டி குரூஸ் . இதுவரை வானொலியில் மட்டுமே ஒலிபரப்பாகி வந்த கலப்படம், தற்போது தொலைக்காட்சி இரண்டிலும் ஒலிப்பரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை மணி 4.35-க்கு ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியினை கண்டு களிக்கலாம்.

 

தஞ்சை எஸ்.தாமஸ், ராமசந்திர ஐயர், இரா.பாலகிருஷ்ணன், முகமது ஹனீப், ரே.கார்த்திகேசு, எஸ்.சுவாமிநாதன், கமலா தேசிகன், எஸ்.கணபதி, அப்பாதுரை, டாக்டர் வீ.பூபாலன்,பார்த்தசாரதி, இராஜசேகரன் ஆகியோர் மலேசிய வானொலி யின் தலைமைத் துவப் பொறுப்புகளில் இருந்த போது மலேசியாவில் தமிழ் மொழி ஒலிபரப்புச் சேவைகளுக்கு அரிய அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளனர்.

 

இன்றைய கால கட்டத்தில் பல புதிய மாற்றங்களோடு செயல்பட்டு வருகிறது மின்னல்.எப்.எம். அவ்வப்போது பல புதிய நிகழ்ச்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் பெண்கள் பேசினால், அஞ்சல் பெட்டி, நண்பனைத் தேடி, ஒரு நேயர் ஒரு தகவல், பேஸ்புக் வானிலே ஆகிய நிகழ்ச்சிகளும் அடங்கும். பதம் ஒன்று பாடல்கள் பல, ஒரு நேயர் அறிவிப்பாளராகிறார், கோலிவூட் பக்கம் போன்ற பழைய நிகழ்ச்சிகள் மறுவடிவம் பெற்று, நேயர்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றன.

 

21 பணியாளர்களோடு இந்நிலையம் இப்போது இயங்கி வருகிறது. துடிப்பான இளைஞர்  திரு.எஸ்.குமரன் மின்னல்.எப்.எம் தலைவராகப் பெறுப்பு வத்து வருகிறார். துணைத்தலைவராக திருமதி.சுமதியும், ஒலிபரப்பு மேலாளராக திரு.சுகுமாரனும் பணியாற்றுகின்றனர். மின்னலோடு இதுவரை பயணித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் மின்னல் நிர்வாகம் நன்றியினை தெரிவித்து கொள்கின்றது.